பணி பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் கிடக்கும் வால்பாறை நகராட்சியின் வணிக வளாகத்தை விரைவில் கட்டிமுடித்து வாடகைக்கு விட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வணிக வளாகம்
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் காந்தி சிலை பஸ் நிறுத்தம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நகராட்சியின் தங்கும் விடுதியான கண்ணாடி மாளிகை உள்ளது.
இதையடுத்து அந்த கண்ணாடி மாளிகையை இடித்துவிட்டு வால்பாறையை சேர்ந்த வியாபாரிகளுக்கு ஏலம் அடிப்படையில் வாடகைக்கு விடுவதற்காக நகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் வால்பாறை மெயின்ரோடு பகுதியில் சாைலயோரத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டது.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வணிக வளாக கட்டிட பணி பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது.
வியாபாரிகள் கோரிக்கை
இதனால் நகராட்சி நிர்வாகத்தின் பெரிய அளவிலான வருவாய் பாதிக்கப்பட்டதோடு, வியாபாரிகள் கடை நடத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பணிகள் முடிக்கப்படாத நிலையில் இருக்கும் கட்டிடத்தில் இரவு நேரத்தில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை பகுதி வியாபாரிகள், நகராட்சி நிர்வாகத்திடம் வணிக வளாகத்தின் கட்டிட பணிகளை விரைவில் முடித்து ஏலம் விட்டு தங்களுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.