வணிக வளாகத்தில் தற்காலிக தொழிற்பயிற்சி மையம்-அதிகாரி தகவல்

0
56

வால்பாறையில் நகராட்சி வணிக வளாகத்தில் தற்காலிக தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொழிற்பயிற்சி மையம்

வால்பாறையில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், தனியார் மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எல்லாம் இருக்கிறது. ஆனால் வால்பாறை பகுதியைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் தொழிற்பயிற்சி சார்ந்த படிப்புகளை தொடர்வதற்கு வாய்ப்பில்லாத நிலையிருந்து வந்தது.

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளை தொழில் கல்வியில் சேர்த்து படிக்க வைப்பதற்கு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருந்து வந்த நகராட்சி வணிக வளாகத்தின் மேல் மாடியில் இருக்கும் 6 அறைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக அரசினர் தொழிற்பயிற்சி மையம் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டது. அந்த வணிக வளாகத்தின் கட்டிடத்தை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் மண்டல இணை இயக்குனர் முஸ்தபா, கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் செல்வராஜன், பயிற்சி அதிகாரி குணசேகரன் ஆகியோர் ஆய்வு செய்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடுத்த மாதம் தொடங்கும்

இதுகுறித்து மண்டல இணை இயக்குனர் முஸ்தபா கூறியதாவது:- வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிரந்தரமாக அரசினர் தொழிற்பயிற்சி மையம் தங்கும் விடுதியுடன் தொடங்குவதற்காக 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிரந்தர கட்டிட பணி தொடங்கி முடிவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் தமிழக அரசின் உத்தரவு படி உடனடியாக தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க வேண்டியிருப்பதால் நகராட்சி நிர்வாகத்தின் வணிக வளாகத்தில் ஜனவரி மாதம் முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படத் தொடங்கும்.

இதற்காக மாணவ-மாணவிகள் சேர்க்கை வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக பொருத்துனர் (பிட்டர்), மின்சார பணியாளர் (எலக்ட்ரீசன்), ஆடை வடிவமைப்பு (பேசன் டிசைனிங்) மற்றும் தொழிற்நுட்பம் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம் ஆகிய பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

உதவி தொகை

பயிற்சி வகுப்பில் சேரும் அனைவருக்கும் ரூ.750 மாதந்தோறும் உதவி தொகையாக வழங்கப்படும். இலவச பஸ் பயணம், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை, பாடப்புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் வேலை வாய்ப்பு வசதியும், பயிற்சி வசதியும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.