போலியான வீடியோக்கள்
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சிலர் போலியான வீடியோக்கள், தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வதந்தியால் தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இடையே அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து தொழிலாளர்களின் அச்சத்தை போக்க தமிழக மற்றும் பீகார் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன. மேலும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து நம்பிக்கை அளித்தனர்
இந்த நிலையில் இந்த பிரச்சினையில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகார் அரசு 4 அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்த குழுவில் பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன், பீகார் நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை ஆணையாளர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் திருப்பூரில் ஆய்வு செய்தனர்.
கோவையில் ஆய்வு
இதனை தொடர்ந்து இந்த குழுவினர் நேற்று கோவை வீரபாண்டி, தொப்பம்பட்டி, அன்னூர் உள்ளிட்ட இடங்களில் பெரிய நிறுவனங்கள், தொழில்துறையில் பணிபுரியும் பீகார் மாநில தொழிலாளர்களை சந்தித்து ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள தொழிலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
அப்போது பெரும்பாலான தொழிலாளர்கள் அந்த குழுவிடம் தங்களுக்கு வந்த அந்த வீடியோக்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு குழுவினர் அந்த வீடியோக்கள் போலி யானது, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதனால் அவர் கள் நிம்மதி அடைந்தனர்.
ஆய்வு கூட்டம்
இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பீகாரில் இருந்து வந்த குழுவினர், கலெக்டர் கிராந்திகுமார், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், வருவாய் அதிகாரி லீலாஅலெக்ஸ், பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா மற்றும் கொசிமா, சிட்கோ, சைமா, காட்மா, ஓட்டல் சங்கம், இந்தியன் சேம்பர் ஆப் கமர்ஸ் அன்ட் இன்டஸ்ரிஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
உரிய பாதுகாப்பு
பின்னர், பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- பீகார் மாநிலத்திலிருந்து கோவைக்கு வந்து தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடினோம், அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டது. சில வீடியோக்கள் மூலம் பொய்யான தகவல்கள் பரவியது. இதை பார்த்து தொழிலாளர்கள் முதலில் மிகவும் பயந்தனர். அந்த செய்தி பொய்யானது என அவர்களுக்கு விளக்கப்பட்டது.
சில தொழிலாளர்களிடம் இன்னும் அச்சம் உள்ளது. அந்த அச்சத்தை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வடமாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்தினர், போலீசார் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.