வடக்கு மண்டல கவுன்சிலர்கள் வருத்தம் கடந்தாண்டு நிதி ஒதுக்கிய பணிகள் இன்னும் நடக்கலை

0
17

கோவை : கோவை மாநகராட்சி வடக்கு மண்டல கூட்டம், மண்டல அலுவலகத்தில் நடந்தது; மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:

சரண்யா, 30வது வார்டு: சூயஸ் நிறுவனத்தினர் குழாய் பதித்து விட்டு, குழியை சரிவர மூடுவதில்லை. குறுகிய வீதிகளில் சைக்கிளில் கூட போக முடியவில்லை. ஒரு பகுதியில் வேலையை முழுமையாக முடித்து விட்டு, அடுத்த பகுதிக்கு செல்ல வேண்டும். சூயஸ் நிறுவனத்தினர் செய்யும் ‘பேட்ச் ஒர்க்’ தரமாக இல்லை. ரோடு மீண்டும் கீழிறங்கி விடுகிறது. மாநகராட்சியே ரோடு போட வேண்டும்.

கற்பகம், 1வது வார்டு: மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிக்கு போதுமான வசதிகள் செய்து தருவதில்லை. எங்களது பகுதிக்கு தர வேண்டிய தண்ணீரை வேறிடத்துக்கு மாற்றி சப்ளை செய்யக் கூடாது. வார்டு பிரச்னைகளை சொன்னால், அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

சித்ரா, 26வது வார்டு: எங்களது வார்டில் வேலைகள் நடப்பதில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன் சொன்ன வேலைகள் நிலுவையில் உள்ளன. அதன்பின், எந்த வேலையும் நடக்கவில்லை. எல்லைத்தோட்டம் வீதியில் ரோடு மோசமாக இருக்கிறது. சாக்கடை கால்வாய் கட்டியுள்ள வீதியில் இன்னும் ரோடு போடவில்லை. பாதாள சாக்கடை பணிக்காக, வடிகாலில் மண் கொட்டிஅடைக்கப்பட்டது. தேங்கியிருந்த கழிவு நீர் வீடுகளுக்குள் சென்று விட்டது; அப்பகுதி மக்கள் திட்டுகின்றனர்.

சிவா, 11வது வார்டு: ‘டிரோன் சர்வே’ செய்வதை நிறுத்த வேண்டும். பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். கடைசியாக வீடுகளுக்கு வர வேண்டும். திட்டச்சாலைகள் உருவாக்கிக் கொடுத்தால், போக்குவரத்து பிரச்னை தீரும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.

சாந்தாமணி, 15வது வார்டு: பில்லுார்-1வது திட்டத்தில் குடிநீர் குறைவாக வருகிறது. பழைய மீட்டரை கழற்றி விட்டதால், எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பது தெரிவதில்லை. கழற்றிய மீட்டரை மீண்டும் பொருத்த வேண்டும். குப்பை சேகரிக்க வார்டுக்கு நான்கு வண்டி தேவை. நகர் நல மையத்தில் டாக்டர் இல்லை; செவிலியரையும் வேறிடத்துக்கு மாற்றி விட்டனர்.

ராமமூர்த்தி, 12வது வார்டு: அதிருப்தி ஏற்படாத அளவுக்கு பணிகளை செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, ரோட்டில் உள்ள மின் கம்பங்களை மாற்றி நட வேண்டும். பில்லுார்-3வது திட்டத்தில் மீதமுள்ள பணிகள் மந்தமாக நடக்கின்றன. கடந்தாண்டு நிதி ஒதுக்கிய பணிகள் இன்னும் நடக்கவில்லை; வேகப்படுத்துங்கள். மாநகராட்சி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.

இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.