வங்கி அதிகாரி எச்சரிக்கை: கவனமா இருங்க! எப்படியும் ஏமாத்துவாங்க.

0
88

மு ன்பெல்லாம் பிக்பாக்கெட் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டு இருப்போம்… அப்படி பிக்பாக்கெட் அடித்தாலும், பர்சில் நாம் வைத்திருக்கும் பணம் மட்டும் தான் போகும்.

ஆனால், தற்போது ஆன்லைன் பிக்பாக்கெட் என்பது, நம் வங்கிக்கணக்கில் வைத்துள்ள மொத்த பணமும் பறிபோய் விடுகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே தவிர்க்க முடியும் என்கிறார், மாவட்ட முன்னோடி வங்கி நிதிசார் மைய கவுன்சிலர் ரவி.

அவர் கூறியதாவது:

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் நன்மையும் உள்ளது; தீமையும் உள்ளது. ஏதாவது பணம் பறிபோனால் உடனடியாக, 1930 என்னும் சைபர் கிரைம் எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும்.

தற்போது, ஓ.டி.பி., எண் கேட்டு பல்வேறு வகையில் ஏமாற்று வேலை நடக்கிறது. மின்வாரிய அதிகாரி போன்றும், சைபர் கிரைம் உட்பட, பல்வேறு அரசு துறை அதிகாரி போன்றும் பேசி, ‘லிங்க்’ அனுப்பி ஏமாற்றுவேலை நடக்கிறது. தெரியாத எண்ணில் இருந்து வரும் எவ்வித லிங்க் வந்தாலும் தொடாமல், ‘டெலிட்’ செய்ய வேண்டியது அவசியம். வெளியூர், வெளிநாடுகளுக்கு டிக்கெட் புக் செய்வது, வங்கி லோன் வாங்குபவர்களுக்கு அதே நிறுவனங்களின் லோகோவுடன், பணம் கிரெடிட் ஆகிவிட்டது, டிக்கெட் புக் ஆகிவிட்டது என லிங்க் அனுப்புகின்றனர்.

தேவையற்ற எந்த ஒரு இடத்திலும், உங்களது வங்கிக்கணக்கு, ஆதார், பான் எண் போன்றவற்றை பகிரவேண்டாம். ஆன்லைன் பரிசு என்ற அறிவிப்புக்கு பலர் ஏமாந்து விடுகின்றனர்.

சமீபத்தில், முத்ரா லோன் விண்ணப்பித்த நபருக்கு அரசு முத்திரையுடன் லோன் அப்ரூவல் ஆகிவிட்டதாக, சான்றுடன் லிங்க் அனுப்பியுள்ளனர்.

புதிதாக, தேவையற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் சிலர், சில லட்சங்களை வங்கிக்கணக்கில் போட்டு எடுத்து கொடுத்தால், ஆயிரக்கணக்கில் பணம் தருவதாக, அப்பாவி மக்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். ஏதேனும் பிரச்னைகள் வந்தால், வங்கிக்கணக்கு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் சிக்காதீர்.

ஏமாற்றுவதற்கு புதுப்புது வழிகளை, கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றனர். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.