வகுப்பு முடிந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பாததால் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

0
105

கோவை விளாங்குறிச்சியில் ஆர்.ஜே.மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருந்து தனியார் வாகனங்கள் மூலம் வீட்டுக்கு செல்லும் மாணவ- மாணவிகளை நேற்று மாலை வகுப்பு முடிந்து, வீட்டுக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்திலேயே அமர வைத்துள்ளனர். குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் வழக்கமாக அழைத்து சென்று வரும், தனியார் வாகன டிரைவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு உள்ளனர்.

ஆனால் அவர்கள் தங்களுக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும், மாணவ- மாணவிகள் அனைவரும் பள்ளி வளாகத்திலேயே உட்கார வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் அனைவரும் உடனடியாக பள்ளிக்கு சென்றனர். இதை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பாமல் தங்கவைத்தது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், தனியார் வேன் டிரைவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி முடிந்தவுடன், இங்கு வந்து மாணவ-மாணவிகளை அழைத்து செல்வதில்லை. மேலும் அவர்கள் அதிக வேகத்தில் செல்கின்றனர் என்று கூறினர். மேலும் அவர்கள் கூறுகையில், பள்ளி நிர்வாகம் சார்பில் நாளை (இன்று) பள்ளியில், பெற்றோர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுங்கள், அதற்கான விளக்கம் அளிக்கப்படும் என்று கூறி பெற்றோர்களை குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:- வழக்கமாக பள்ளி முடிந்து மாலை 4 மணிக்கு குழந்தைகள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். ஆனால் 5 மணியாகியும் குழந்தைகளை வரவில்லை. கேட்டால் தனியார் வேன் டிரைவர்களின் செயல்பாடு குறித்து குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

பள்ளி கட்டணம் குறித்து 1 வாரத்திற்கு முன்பே சுற்றறிக்கை தரும் பள்ளி நிர்வாகம் இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் தராமல் குழந்தைகளை பள்ளி மைதானத்திலேயே இருக்க வைத்துள்ளனர். இது குறித்து நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு பெற்றோர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.

வேறு எந்ததகவலும் தரவில்லை. அதனைத்தொடர்ந்து நாங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.