என்.சந்திராபுரம் அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் ஒழுகும் மழைநீரால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் புதிய கட்டிடம் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட என்.சந்திராபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 56 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஓடுகள் வேயப்பட்ட ஒரேயொரு கட்டிடத்தில் மட்டும் பள்ளி செயல்பட்டு வந்தது. அதன்பிறகு கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்பட்டன.
சமீப காலம் வரை பள்ளியில் 4 கட்டிடங்கள் இருந்தன. அதில் ஒன்று ஓடுகள் வேயப்பட்ட கட்டிடம். மற்றவை கான்கிரீட் கட்டிடங்கள் ஆகும். இவை கட்டப்பட்டு 25 ஆண்டுகளை கடந்து விட்டது. இதற்கிடையில் ஓடுகள் வேயப்பட்ட கட்டிடமும், ஒரு கான்கிரீட் கட்டிடமும் முற்றிலும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு மாணவ-மாணவிகள் அமர்ந்து பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த 2 கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டன. இதனால் மீதமுள்ள 2 கான்கிரீட் கட்டிடங்களுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அந்த கட்டிடங்களில் 4 வகுப்பறைகள் உள்ளன. அதில் 2 வகுப்பறைகளில் தளவாட பொருட்களை போட்டு வைத்துள்ளனர். மீதமுள்ள 2 வகுப்பறைகளில் மட்டுமே மாணவ-மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்துகின்றனர்.
ஒழுகும் மழைநீர்
இந்த நிலையில் அந்த வகுப்பறைகள் உள்ள கட்டிடமும் சேதம் அடைந்து காணப்படுகிறது. அதன் மேற்புற பக்கவாட்டில் சேதமடைந்த பகுதியில் இருந்து மழை பெய்யும்போது தண்ணீர் உள்ளே ஒழுகுகிறது. இதனால் வகுப்பறைகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் அமர்ந்து பாடம் படிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
விரைவில் நடவடிக்கை
இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
எங்கள் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து விட்டது. இதனால் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலை உள்ளது. வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க கூட முடியாத வகையில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மிகுந்த அவதியடைந்து வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தர விரைவில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.