கோவை; கோவை மாநகர பகுதியில் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரச் சொல்லி, மாநகர போலீஸ் தரப்பில், பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.
கோவை மாநகர பகுதியில், நாளுக்கு நாள் ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. கடைகளுக்கு செல்வோர் வாகனங்களை ரோட்டில் நிறுத்துகின்றனர். பொதுமக்கள் நடுரோட்டில் நடந்து செல்கின்றனர். ரோடு குறுகலாகி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போதாக்குறைக்கு வர்த்தக நிறுவனத்தினர், ரோட்டில் விளம்பர பலகைகளையும் வைக்கின்றனர்.
நடைபாதை இல்லை
வர்த்தக பகுதிகள் அதிகமுள்ள வீதிகள் மற்றும் ரோடுகளில் பொதுமக்கள் செல்வதற்கு நடைபாதை கூட இல்லை. இவற்றை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாநகராட்சி நகரமைப்பு துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை போக்குவரத்தை சீரமைக்க, போலீஸ் தரப்பில், ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியமாக இருக்கின்றனர். அதனால், ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது; வாகனங்கள் செல்வதற்கு போதிய வசதியின்றி சாலை குறுகி வருகிறது. இவ்விஷயத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூடுதல் கவனம் செலுத்தி, நகரமைப்பு பிரிவினருக்கு, ‘சுளுக்கு’ எடுக்க வேண்டும்என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகள்?
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் தினம் தினம் அவதிப்படும் மாநகர போலீசார், எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டுமென பட்டியல் தயாரித்து, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டியில் கொடுத்திருக்கின்றனர்.அப்பட்டியலில் கூறியிருப்பதாவது:* ஆர்.ஜி., வீதி முழுவதும். ஒப்பணக்கார வீதி பிரகாசம் பஸ் ஸ்டாப் முதல் ராஜ வீதி சந்திப்பு வரை இருபுறமும். கே.ஜி., வீதி முழுவதும்.* சுக்ரவாரப்பேட்டை முதல் மேட்டுப்பாளையம் ரோடு சிந்தாமணி வரை.* சுக்ரவாரப்பேட்டை முதல் காந்திபார்க் வரை.* காந்திபார்க் முதல் பால் கம்பெனி வரை.* என்.எச்., ரோடு முழுவதும். வி.எச்., ரோடு முழுவதும்* வின்சென்ட் ரோடு முழுவதும், ஹவுசிங் யூனிட் ரோடு.* டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்* செல்வபுரம் சிவாலயா சந்திப்பு முதல் மாநகர எல்லை வரை சாலையின் இருபுறமும்* சாரதா மில் ரோடு முழுவதும்* குனியமுத்துார் பள்ளி முதல் இடையர்பாளையம் பிரிவு வரை இருபுறமும்.* நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்துதல்.* அரசு மருத்துவமனைமுன்புள்ள பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு* ஆர்.கே., மில் சாலை, விளாங்குறிச்சி சாலையில் உள்ள கடைகள்,* மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள கடைகள்* பீளமேடு புதுார் ஆர்.டி.ஓ., ஆபீஸ் ரோட்டில் உள்ள கடைகள்* தண்ணீர் பந்தல் சாலை, சிட்ரா முதல் காளப்பட்டி வரையுள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்றி, வேறிடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.* அத்திப்பாளையம் சந்திப்பு, சரவணம்பட்டி சோதனை சாவடி, சரவணம்பட்டி – துடியலுார் சாலை சந்திப்பு, சரவணம்பட்டி பள்ளி முன்.