ரேஷன் பொருட்களை சரியான எடையில் கேட்டால் திட்டமிட்டு தாமதப்படுத்துறாங்க! உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்ப முடிவு

0
7

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் இருந்து ரேஷன் பொருட்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

கிணத்துக்கடவு, குமாரபாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு, கடந்த 17ம் தேதி, அரசம்பாளையத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் இருந்து ரேஷன் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

இதில், அரிசி மூட்டைகள் ஒவ்வொன்றிலும், 2 முதல் 3 கிலோ வரை எடை குறைவாக இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டது. தற்போது, சரியான எடை அளவில் ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகிறது. ஆனால், நாள் ஒன்றுக்கு இரண்டு லோடு மட்டுமே அனுப்பப்படுகிறது.

இதனால், நகர்வு பணி பாதிக்கப்படுவதுடன், ரேஷன் கடைகளுக்கு காலதாமதமாக பொருட்கள் அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

அரிசி மூட்டை எடை குறைவாக இருந்தபோது, நாள் ஒன்றுக்கு ஆறு முதல் எட்டு லோடுகள் வரை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், எடை அளவு முறைப்படுத்தப்பட்ட பின், வேண்டுமென்றே இரண்டு லோடு மட்டும் அனுப்பப்படுகிறது.

இதனால், ரேஷன் கடைகளுக்கு செல்லும் பொருட்கள் அளவு குறைவதுடன், ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இதை தவிர்க்க குறைதீர் நாளில் மனு அளிக்கப்பட உள்ளது. மேலும், அரசம்பாளையம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் இருந்து வேகமாக செயல்பட்டு, ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்ப, மாநில கூட்டுறவு துறை, மாநில உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு, கூறினார்.