காட்டுயானை புகுந்தது
வால்பாறை பகுதியில் நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் நீர்நிலைகளை தேடி அலைய தொடங்கி விட்டன. இதனால் நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை காட்டு யானை அப்பர்பாரளை, லோயர் பாரளை, புதுத்தோட்டம், அய்யர்பாடி, ரொட்டிக்கடை பாறைமேடு, பழைய வால்பாறை பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானை நேற்று முன்தினம் இரவு பாறைமேடு பகுதியில் நின்றிருந்தது.
ரேஷன் அரிசியை தின்றது
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு பழைய வால்பாறை காபி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் கதவை உடைத்து அட்டகாசம் செய்தது. ேமலும் துதிக்கையை உள்ளே விட்டு ரேஷன் அரிசியை எடுத்து தின்றது. இதை அந்த பகுதியில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் பார்த்து கூச்சலிட்டு யானையை விரட்ட தொடங்கினர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த வால்பாறை வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.