வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் பல்வேறு கூட்டங்களாக பிரிந்து நடமாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கருமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 2 காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் இருந்த ரேஷன் கடையின் சுவற்றை உடைத்து அரிசியை எடுக்க முயற்சித்தன. ஆனால் அது முடியாமல் போனதால், கடையின் மேற்கூரையை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டது. பின்னர் அங்கிருந்த குறைந்த அளவிலான ரேஷன் அரிசியை எடுத்து தின்றன. இதை அறிந்து வந்த வனத்துறையினர், காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். அவை குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால், தொழிலாளர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இதனால் வால்பாறை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.