ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு குழுக்கள் தொடக்கம்

0
83

ரோந்து குழுக்கள்

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் டி.ஜி.பி. ஆபாஸ்குமார் உத்தரவுப்படி, கேரள எல்லையோர பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதலை தடுக்கும் வகையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் கொண்ட சிறப்பு ரோந்து குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் சிறப்பு குழுக்கள் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமை தாங்கி, ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக எல்லையோர கிராமங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு குழு உருவாக்கப்பட்டு உள்ளது. கோவை மண்டலத்தில் பொள்ளாச்சியிலும் இது போன்ற சிறப்பு ரோந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

தகவல் தெரிவிக்கலாம்

சிறப்பு ரோந்து குழுவானது மாநில எல்லையோர பகுதிகள் வழியாக ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல்களை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும். பொள்ளாச்சி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி 63792-68774 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம்.

குழுவில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீசார் சேர்ந்து சுழற்சி முறையில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பாக மாநில எல்லையோர பகுதிகளில் ரோந்து செல்வார்கள். பொதுமக்களும் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்துவோர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். விழாவில் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.