ரெயில் 1¾ மணி நேரம் தாமதம்

0
55

கோவை ரெயில் தாமதம்

பொள்ளாச்சியில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு ரெயில் புறப்பட்டு கோவைக்கு 8.45 மணிக்கு செல்கிறது. கோவையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு இரவு 7.45 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரெயிலுக்கு தினமும் திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரசில் தான் கண்காணிப்பாளர் (கார்டு) வருவார்.

இந்தநிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சிக்னல் பிரச்சினை காரணமாக ரெயில்கள் தாமதமானது. பொள்ளாச்சிக்கு காலை 5.40 மணிக்கு வர வேண்டிய அமிர்தா எக்ஸ்பிரஸ் காலை 9.05 மணிக்கு வந்தது. கோவை ரெயிலுக்கு அமிர்தா எக்ஸ்பிரசில் கண்காணிப்பாளர் வந்த பிறகு கோவைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்ல வேண்டிய பயணிகள் 1¾ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

வேலைக்கு செல்ல முடியவில்லை

அதாவது காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக அரசு, தனியார் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். சிலர் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி சென்றனர். பெரும்பாலானோர் திரும்பி சென்றதால் குறைவான பயணிகளுடன் கோவைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி-கோவை ரெயிலுக்கு அமிர்தா எக்ஸ்பிரசில் தான் தினமும் கண்காணிப்பாளர் வருகிறார். எர்ணாகுளத்தில் சிக்னல் பிரச்சினை காரணமாக பாலக்காட்டிற்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் தாமதமாக வரும் என்பது பாலக்காடு கோட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். எனவே, பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் அந்த கார்டை அனுப்பி வைத்திருக்கலாம். அந்த ரெயிலில் கண்காணிப் பாளர் வந்திருந்தால் கோவை ரெயில் வழக்கமான நேரத்தில் புறப்பட்டு இருக்கும்.

கூடுதல் ரெயில்

பாலக்காடு கோட்ட ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் வேலைக்கு, கல்லூரிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொள்ளாச்சியை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கி, அதில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் கூடுதலாக ரெயில்களை இயக்கவும் முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.