பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கொண்டு வந்த உைடமைகள் அனைத்தையும் சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதித்தனர்.
இந்த நிலையில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் கோவை வந்தார். பின்னர் அவர் ரெயில் நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகளின் உைடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. தண்டவாளத்தின் ஓரத்தில் சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றுகிறார்களா? ஏதாவது பொருட்கள் கிடக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தண்டவாளத்தில் நடந்து செல்லும்போதுதான் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், அங்கு குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் இதுவரை 800 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். ரெயில் நிலையங்களில்தான் அதிகளவில் விபத்துகள் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தண்டவாளத்தை கடந்து செல்வதுதான். எனவே ரெயில் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், தண்டவாளத்தை கடப்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
கோவை சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த 4 வாலிபர்கள் ரெயில் மோதி பலியானார்கள். இது போன்ற சம்பவங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. மேலும் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் மதுக்கடைகளை மாற்ற அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் கடிதம் கொடுக்கப்படும்.
மேலும் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துதல், செல்பி எடுப்பது, நடந்து செல்வது போன்றவற்றை கண்காணித்து தடுக்க போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏரியா போலீசாரும் உள்ளனர். இந்த தனிப்படையினர் ரோந்து செல்வதால் தண்டவாளத்தில் பொதுமக்கள் நடப்பது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.
ரெயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை உடன் இருந்தார்.