கோவையில் ரூ.1,500 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
மரக்கன்றுகள் நடும் திட்டம்
கோவை மாநகராட்சியில் 75 இடங்களில் அடர்வனக் காடுகள் (மியாவாக்கி) உருவாக்க மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகர்ப்புற ஊராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் கியூஆர் கோடு மூலம் புகார் தெரிவிக்கும் முறை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடமாடும் நூலகத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
நிதி ஒதுக்கீடு
நீலகிரி மாவட்டத்துக்கு என்னென்ன தேவையோ அவை முதல்- அமைச்சரிடம் கேட்டு பெற்று தரப்படும். கோவை மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பேற்றதில் இருந்து சாலைகள் முழுவதுமாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார். இதற்காக இந்த ஆண்டு ரூ.100 முதல் ரூ.200 கோடி வரை வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் கோவையில் மக்கள் சபை மூலம் பெறப் பட்ட மனுக்கள் அடிப்படையில் சாலை, வடிகால் அமைக்க ரூ.200 கோடி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் 17 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களுக்காக ரூ.30 கோடி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு 200 இலகுரக வாகனங்கள் வாங்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ரூ.1,500 கோடியில் வளர்ச்சி பணிகள்
மேலும் ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு உட்பட்ட விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத் துக்கு ரூ.309 கோடி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சத்திசாலையில் குப்பை மாற்றுநிலையத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.3.52 கோடி, புல்லுக்காடு, சாரமேடு, கரும்புக்கடை பகுதியில் விரிவான வளர்ச்சி பணிகளுக்கு ரூ.16 கோடி, நுண்ணறி மேலாண் மை திட்டத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரூ.9 கோடியில் வாலாங்குளத்தில் உபரிநீர் வெளியேறு வதற்கு ஏதுவாக திருச்சி சாலை வழியாக சுரங்கம் அமைத்து சங்கனூர் பள்ளம் வரை பிரத்யேக மழைநீர் வடிகால் அமைக்கப் படும்.
கோவைக்கு 12 முதல் 15 மாதங்களில் ரூ.1,500 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும். அதில் முதல்கட்டமாக ரூ.500 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.