கோவை:கோவை, ராமநாதபுரம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55; இவரது மனைவி சாந்தி, 50. இவர்களின் மகள், 2021ல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
மகளை மருத்துவக் கல்லுாரியில் சேர்ப்பதற்காக சாந்தி முயன்றார். அப்போது, சென்னையை சேர்ந்த ஸ்ரீதர், 48, என்பவர் சாந்திக்கு அறிமுகமானார்.
அவர், சாந்தியின் மகளுக்கு மருத்துவக் கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாக கூறினார்.
மேலும், மருத்துவ கல்லுாரியில் சீட் பெற, அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்து, 2021 முதல் 2022 வரை பல தவணைகளாக, சாந்தியிடம் இருந்து, 61 லட்சம் ரூபாயை வங்கி கணக்கு மூலம் பெற்றார். ஆனால், அவர் சாந்தியின் மகளுக்கு சீட் வாங்கி தரவில்லை.
இதுகுறித்து சாந்தி, ஸ்ரீதரிடம் கேட்டபோது, பணத்தை திருப்பி தருவதாக கூறி, 47 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தார். ஆனால், 14 லட்சம் ரூபாயை கொடுக்கவில்லை. பலமுறை பணத்தை கேட்டும் ஸ்ரீதர் பணத்தை தராமல் இழுத்தடித்தார்.
இதையடுத்து, ராமநாதபுரம் போலீசில் புகார் சாந்தி நேற்று அளித்தார். ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.