ரூ.14 லட்சம் மிளகு வாங்கி மோசடி செய்த நபர் கைது

0
12

கோவை,:சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி, 41, மிளகு வியாபாரி. கோவையை சேர்ந்த கருப்புசாமி என்பவர், இவரை தொடர்பு கொண்டு, 2 டன் மிளகு தேவைப்படுவதாக கூறினார்.

உடனே, 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2 டன் மிளகை, அந்த பெண் அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட கருப்புசாமி, 14 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தார்.

வங்கியில் அவற்றை செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியது.

தனலட்சுமி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்த போது, இதே போல பலரிடம் அவர் மோசடி செய்து இருப்பதும், அவர் மீது கோவை போலீஸ் ஸ்டேஷன்களில், 19 வழக்குகள் இருப்பதும், 2 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருப்பதும் தெரிந்தது.

தனலட்சுமியை ஏமாற்றிய வழக்கில் போலீசார், அவரை தேடி வந்தனர். அவர், சின்னவேடம்பட்டியில் இருப்பதாக, தகவல் கிடைத்தது.

அங்கு சென்று பார்த்த போது, கருப்புசாமி, தன் சொகுசு காரில் தி.மு.க., கரை வேட்டியுடன், மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்திக்க காத்திருப்பது தெரிந்தது.

கோவை ராமநாதபுரம் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.