ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சி சார்பில் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் கட்டிட பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதை தொடர்ந்து கட்டிடம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தரமானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
7 ஆயிரம் புத்தகங்கள்
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடியே 88 லட்சம் செலவில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் சுமார் 7 ஆயிரம் வகையான புத்தகங்கள் வைக்கப்படும் வகையில் கட்டப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டித்தேர்வுகளை மாணவ- மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் படிப்பதற்கு தனி அறையும் அமைக்கப்படுகிறது. பணிகளை விரைந்து முடித்து அறிவுசார் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.