ராமபட்டிணம் ஊராட்சியில் 23ல் கருத்து கேட்பு கூட்டம்

0
58

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ராமபட்டிணம் ஊராட்சியில், கருத்து கேட்பு கூட்டம் வரும், 23ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமபட்டிணம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், விசாரணை அலுவலர் நியமனம் செய்து விசாரிக்கப்பட்டது.

அதன் அறிக்கையின்படி, ராமபட்டிணம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமியிடம், மூன்று குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டு, அவரால் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமாக இல்லை.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்,1994ம் ஆண்டு சட்டப்பிரிவு, 205ன் கீழ் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு இருவார காலத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட கலெக்டர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமபட்டிணம் ஊராட்சி மன்றத்தின் கருத்தை அறியும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் வரும், 23ம் தேதி ராமபட்டிணம் ஊராட்சி அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு நடைபெறுகிறது. இத்தகவல், பொள்ளாச்சி வருவாய்துறை வாயிலாக, ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.