கோவை, பிப். 22: கோவை மாநகர காவல்துறையும். கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து கோவை மாநகர கல்லூரிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகப் போட்டியை கல்லூரியின் கலையரங்கில் நடத்தியது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
அப்போது அவர் பேசுகையில், ‘‘இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல்துறை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இளம் தலைமுறையினர் முன்னேற்றத்திற்குத் தடையாக போதைப் பழக்கம் இருக்கிறது. இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகிறது. போதைப்பொருட்களை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க வேண்டும். இளைய சமுதாயத்தினர் போதைப் பழக்கத்தில் இருந்து விலகி வெளிவர வேண்டும்’’ என்றார்.
இதில், கோவையை சேர்ந்த பொறியியல், மருத்துவம், சட்டம், அலைட் எல்த் சயின்ஸ், நர்சிங், கலை அறிவியல், பாலிடெக்னிக் போன்ற பல்வேறு நிலைகளில் 52 கல்லூரிகளை சார்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகம் நடித்துக் காட்டினர். இதில், முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டி சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.