கோவை; இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட, ராணுவ பீரங்கி கோவை ரெட் பீல்ட்ஸ் பகுதியில் பொது மக்கள் பார்வைக்காக, திறந்து வைக்கப்பட்டது.
ரஷ்யாவில் கடந்த 1955ம் ஆண்டு தயார் செய்யப்பட்ட, ‘டி – 55 மீடியம் பீரங்கி’ 1971ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1971ம் ஆண்டு நடந்த போரில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, இந்தியாவிற்காக பல போர்களில், இந்த டி 55 பீரங்கி பயன்படுத்தப்பட்டது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் பராக்ராம் உள்ளிட்ட போர்களில் பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, 38 வருடங்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, 2009ம் ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில், பீரங்கி கோவைக்கு கொண்டு வரப்பட்டு, ரெட் பீல்டு பகுதியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல் கரன்பீர் சிங் பரார் திறந்து வைத்தார்.
கலெக்டர் கிராந்தி குமார், கே.ஜி., மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் மற்றும் ராணுவ அதிகாரிகள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு எழுதிய கடிதங்களை, கரன்பீர் சிங் பராரிடம் கொடுத்தனர்