கோவை; கோவை, குறிச்சிபிரிவு சந்திப்பில், ‘ரவுண்டானா’ அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. புழுதி பறந்து கண்களை மறைப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்
கோவை, ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், பொள்ளாச்சி ரோட்டில் வரும் வாகனங்கள், போத்தனுார் ரோட்டில் வரும் வாகனங்கள் குறிச்சி பிரிவு சந்திப்பில் சங்கமமாகின்றன. ‘பீக் ஹவர்ஸில்’ அதிகமான வாகனங்கள் வருவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. தற்காலிகமாக மண் கொட்டி சமன் செய்து வருவதால், புழுதி பறக்கிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. ‘ரவுண்டானா’ அமைக்க ரூ.1.8 கோடி ஒதுக்கி, ‘டெண்டர்’ கோரப்பட்டு பல மாதங்களாகி விட்டது. ஆனால், சாலை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி கூறியதாவது:
குறிச்சி பிரிவு சந்திப்பில் ரூ.1.8 கோடியில் ‘ரவுண்டானா’ அமைக்கும் பணி துவங்கியுள்ளது. தற்போது சாலையை அகலப்படுத்தும் வேலை ஆரம்பித்திருக்கிறது. மேடு பள்ளங்கள் சரி செய்யப்படும். பொள்ளாச்சி ரோடு மேடாக இருக்கிறது.
அந்த மேட்டின் அளவு குறைக்கப்படும்; அதற்கேற்ப, பள்ளமாக உள்ள ரோட்டின் உயரத்தை சற்று அதிகரித்து, சமப்படுத்தப்படும். உயர்கோபுர மின் விளக்கு வசதியுடன் ‘ரவுண்டானா’ அமைக்கப்படும்.
சிக்னல் இல்லாமல் வாகனங்கள் சுற்றிச்செல்லும் வகையில், வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கின்றனர். மார்ச் வரை அவகாசம் இருந்தாலும், இம்மாத இறுதிக்குள் முடிக்க இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.