ரயில் பயணிகளிடம் அறிவுறுத்தல்: அறிமுகம் இல்லாத சக பயணிகள் கொடுப்பதை சாப்பிட வேண்டாம்

0
4

மேட்டுப்பாளையம்; ரயிலில் தனியாக பயணம் செய்யும்போது, அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானங்களையோ, திண்பண்டங்களையோ வாங்க வேண்டாம். சந்தேகப்படும் படி நபர்கள் இருந்தால், 1512, 9962 – 500500 என்ற எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் சார்பில், பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கோவை பாசஞ்சர் ரயிலிலிருந்து வந்த பெண் பயணிகளிடமும், ரயிலில் பயணம் செய்த பெண் பயணிகளிடமும், ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். கோவை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, பேசியதாவது:

பெண்கள் ஜன்னல் ஓரத்தில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும். படுத்து துாங்கும் பெண் பயணிகள், தங்களின் நகைகளை வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் பயணம் செய்வோர் தங்கள் பெட்டியின் கதவுகளை மூடி பாதுகாப்பாக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக கழிவறை கதவுகள், நீண்ட நேரமாக உட்புறமாக மூடப்பட்டிருந்தால், உடனடியாக போலீசிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவில் பயணம் செய்யும்போது ஏதேனும் ஆண்கள் மற்றும் சக பயணிகளால் தொந்தரவு ஏற்பட்டால், 1512, 9962, 500500 ஆகிய மூன்று எண்ணில், ஏதாவது ஒரு எண்ணிற்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தால், அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பர். அதேபோன்று அறிமுகம் இல்லாத சக பயணிகள், குளிர்பானங்களையோ, தின்பண்டங்களையோ கொடுத்தால், வாங்கி சாப்பிட வேண்டாம். பெண்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு இன்ஸ்பெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த பிரதீப், சந்திரமோகன், ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன், ரயில்வே போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர். மொபைல் போன்கள், விழிப்புணர்வு சம்பந்தமான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், பெண் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.