கோவை; கோவை, மதுரையில் சலவை மையங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில், ஆண்டுதோறும், 60 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். ரயில்களில் ஏ.சி., பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, இரு படுக்கை விரிப்புகள் வழங்கப்படுகின்றன.
பயணிகள் பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்வது, 2010ம் ஆண்டில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என இருந்தது. அதன்பின், இரு மாதங்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது.
2016ம் ஆண்டு முதல், 15 நாட்களாக குறைக்கப்பட்டது. சவால்கள் உள்ள பகுதிகளில் மட்டும், 20 – 30 நாட்களுக்குள் சுத்தம் செய்யப்படும். போர்வை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய, சென்னையில் பேசின் பாலம் அருகே ஒரு சலவை மையம், கொச்சுவேலியில் ஒரு மையம் செயல்படுகிறது. இங்கு தினமும், சராசரியாக, 26 டன் துணிகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
தேவையை கருத்தில் கொண்டு, கோவை, மதுரை, மங்களூருவில், போர்வை, படுக்கை விரிப்புகள் சுத்தம் செய்யும் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சலவை மையங்கள் துவங்கப்பட்டால், தினமும், 7,800 துணிகள் சுத்தம் செய்ய முடியும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.