கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்வதற்கும், சொந்த ஊருக்குச் செல்வதற்கும், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிகளவில் பயணிகள் வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும், 55 ரயில்கள் வந்து செல்கின்றன. இவை தவிர, கோவை வழியாக, 100க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கோவை ரயில்வே ஸ்டேஷனை தினமும் பல ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். தற்போது, கோடை விடுமுறை துவங்கியுள்ளது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை என்பதால், சுற்றுலா செல்லும் பயணிகள் மற்றும் சொந்த ஊர் செல்லும் பயணிகள் என கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பயணிகளின் வருகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால், கோவை ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., தலைமை வகித்தார். கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர்.
ரயில்வே தண்டவாள பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதை தடுக்கவும், தண்டவாளங்களில் கற்களை வைப்பது போன்ற அசம்பாவிதங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு அதிக பயணிகள் வருவதால், பிக்பாக்கெட் மற்றும் கஞ்சா உள்ளிட்ட குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை, பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் செயல்படுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. பழைய குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிப்பது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஈடுபடுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.