கோவை: ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ரயில்வே போலீசார் ‘வாட்ஸாப்’ குழுவை, அறிமுகம் செய்தனர்.
கடந்த 6ம் தேதி கோவையில் இருந்து திருப்பதி சென்ற ரயிலில், பெண்கள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இந்த சம்பவத்தையடுத்து, ரயிலில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, ரயில்வே போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., வன்னிய பெருமாள் உத்தரவில், ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நேற்று ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு’ என்ற, ‘வாட்ஸாப்’ குழு துவங்கப்பட்டது.’
இந்த குழுவில் பெண் ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், மாணவியர், செவிலியர், பெண் வழக்கறிஞர்கள், பெண் பத்திரிகையாளர்கள், குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள், பெண் பயணியர், பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், என்.சி.சி., அலுவலர்கள் என, பல தரப்பட்ட பெண்கள் உள்ளனர். பெண்கள் ரயிலில் பயணிக்கும் போது, தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பாபு, இன்ஸ்பெக்டர் மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அழைக்கலாம்
ரயிலில் செல்லும் பெண்கள் அவசர உதவிக்கு, தமிழக ரயில்வே போலீஸ் உதவி எண் 1512, ரயில்வே பாதுகாப்பு உதவி எண் 139 அல்லது 99625 00500 ஆகிய, எண்களை அழைக்கலாம்.