யானை வருவதை தடுக்க நூதன திட்டம்

0
65

மலைவாழ் மக்கள்

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தது. இதற்கிடையில் அந்த யானை நேற்று முன்தினம் முதல் சின்னாறுபதி மலைவாழ் மக்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நிற்கிறது.

இதற்கிடையில் யானை மலைக்கிராமத்துக்குள் நுழைவதை தடுக்க யானை வரும் பாதையில் மலைவாழ் மக்கள் கம்பி மூலம் கற்களை கட்டி தொங்கவிட்டு உள்ளனர். இதன் காரணமாக இதுவரைக்கும் யானை கிராமத்திற்குள் வரவில்லை என்று மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். இருப்பினும் யானையை நடமாட்டத்தை கண்காணித்து கிராமத்துக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கண்காணிப்பு தீவிரம்

ஆழியாறில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை சுற்றி திரிந்து வருகிறது. இதுவரைக்கும் யானை வனப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். யானை வால்பாறை சாலையை கடந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வரக் கூடும். எனவே சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலையில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.

யானை நிற்பதை பார்த்தால் தொந்தரவு செய்ய கூடாது. அருகில் சென்று செல்போனில் புகைப்படம் எடுப்பது, சத்தம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். யானை நிற்பதை பார்த்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.