கோவை; மை வி3 நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்ட மக்களை புகார் அளிக்க வருமாறு, கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்தனர்.
தமிழகம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மை வி3 என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் சக்தி ஆனந்த், பொது மக்களிடம் இருந்து முதலீட்டு தொகை பெற்று ஏமாற்றியதாக, போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மை வி3 நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள், உடனடியாக முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்களுடன், மாநகர கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு, நேரில் வந்த புகார் மனுக்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோவை தவிர, பிற மாவட்டங்களில் இருக்கும் மக்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், புகார் மனுக்களை அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.