பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் ஜோதிபுரம் பகுதியில் குறுகலான சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த, மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், ரூ. 7.42 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் ஜோதிபுரம் வரை, 1.85 கி.மீ., தூரத்துக்கு ஆண்டு நிதி திட்டத்தில், ரூ. 115.6 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த, 2024 ஆண்டு திறக்கப்பட்டது.
இதில், ஜோதிபுரம் பகுதியில் மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் சர்வீஸ் ரோடு மற்றும் அருகே உள்ள மேம்பாலத்தின் இறங்கு பகுதி ஆகியவை நெருக்கடியான சூழலில் இருந்ததால், விபத்து ஏற்படும் நிலை உருவானது. இதனால் பெரும் பொருள் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தால், பொதுமக்களுக்கு முழுமையான பலன் கிடைக்காமல் போனது.
குறிப்பாக, ஜோதிபுரம் பகுதியில் பாலம் இறங்கும் இடத்தில் சர்வீஸ் ரோட்டில் இணையும் பகுதி மிக,மிக குறுகலாக இருந்தது. சர்வீஸ் ரோடு வழியாக வரும் வாகனங்களும், பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களும் ஒரே இடத்தில் சந்திப்பதால் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. தற்போது மேம்பாலத்தின் இறங்கு பகுதியில் வாகனங்கள் சர்வீஸ் ரோட்டின் அருகே செல்லாமல் இருக்க கான்கிரீட் பிளாக்குகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த இடத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டை சிறிது தூரத்துக்கு நீட்டித்தபின், மேட்டுப்பாளையம் ரோட்டில் இணைத்தால் மட்டுமே விபத்துக்களை முழுமையாக தடுக்க முடியும். அப்போதுதான் பாலத்தால் மக்கள் முழுமையான பயன் பெற முடியும் என்ற நிலை உருவானது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை, சாலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டது. இதையடுத்து சர்வீஸ் ரோட்டை, 40 முதல், 50 மீட்டர் தூரத்துக்கு நீட்டித்து அப்பகுதியில், 200 முதல், 250 சதுர மீட்டர் அளவுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தி, சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக சர்வீஸ் ரோட்டை நீட்டிக்கும் இடத்தில் உள்ள வீடு, கடைகள் ஆகியவற்றை அகற்றி அவர்களுக்கு தேவையான நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, தற்போது மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ரூ. 7.42 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளருக்கு, மத்திய அரசின் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவிக்கையில், நில எடுப்பு மற்றும் சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த இத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் கூறுகையில், மத்திய அரசு பிறப்பித்து உள்ள உத்தரவால் தொடர்புடைய நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நஷ்ட ஈடு வழங்கி, நில எடுப்பு பணிகளும், சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்தும் பணிகளும் விரைவில் துவங்கும்.
பணிகள் முடிந்தவுடன், பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் ஜோதிபுரம் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களும், எவ்வித போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் தாராளமாக பயணிக்கலாம் என்றார்.