புகார் மனு
கோவை -பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது சில ஆண்டுகளுக்கு முன்பு கிணத்துக்கடவு ஊருக்குள் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் தற்போது கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், தென் மாவட்டங்களில் இருந்து வரும் அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக கோவை சென்று விடுகிறது. இதனால் கிணத்துக்கடவிலிருந்து கோவை, பொள்ளாச்சிக்கு செல்லும் பயணிகளும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் அரசு விரைவு பஸ்சும் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் கிணத்துக்கடவு சாலைப்புதூர், அரசம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கி விடுவதால் பயணிகள் கடும் சிரமமடைந்து ½ கிலோமீட்டர் தூரம் நடந்து கிணத்துக்கடவு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு பகுதி பொதுமக்கள் கிணத்துக்கடவு பேரூராட்சி சார்பில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தத்திடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
அபராதம்
இந்தநிலையில் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை அதிரடியாக கிணத்துக்கடவு மேம்பாலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கோவை, பொள்ளாச்சி செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கோவை, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லாமல் மேம்பாலத்தில் வந்த 2 தனியார் பஸ்சை நிறுத்தி பஸ் டிரைவருக்கு அபராதம் விதித்தனர். மேலும் தனியார் பஸ் டிரைவர்களிடம் கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லாமல் மேம்பாலத்தில் தொடர்ந்து பஸ்கள் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்ைக விடுத்தனர்.
ரத்து செய்யப்படும்
இதுகுறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் கூறியதாவது:- கோவை, பொள்ளாச்சி பகுதியில் இருந்து இயக்கப்படும் சில பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லாமல் கோவை, பொள்ளாச்சி செல்வதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று அதிரடியாக கிணத்துக்கடவு மேம்பாலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லாமல் மேம்பாலத்தில் சென்ற 2 தனியார் பஸ்களை கண்டறிந்து முதல் கட்டமாக பஸ் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லாமல் பஸ்கள் மேம்பாலத்தில் சென்றால் மீண்டும் அபராதம் விதிக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதேபோல் அனுமதிசீட்டு ரத்துசெய்ய மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.