மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 8,200 கனஅடியாக அதிகரிப்பு – நீர்மட்டம் 5 நாட்களில் 5 அடி உயர்வு

0
96

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 23-ந்தேதி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைந்தது. காவிரி நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் கண்காணித்து வருகிறார்கள்.

காவிரிநீர் வரத்தின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று வினாடிக்கு 8,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
கடந்த 23-ந்தேதி அணை நீர்மட்டம் 39 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 44.22 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்களில் அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது.
ஆடிப்பெருக்கு விழா வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மேட்டூருக்கு வருவார்கள். அங்கு காவிரி ஆற்றில் புனித நீராடுவார்கள். அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் வழிபாடு நடத்துவார்கள்.
இந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 44.22 அடியாக இருந்தது. நீர்மட்டம் குறைவாக இருப்பதால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நேற்று வரை தண்ணீர் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆடிப்பெருக்கு விழா நடைபெறும்போது அணைக்கு நீர்வரத்து அதிகரிக்குமா?, அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.