மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி கோவை கல்லூரி மாணவர் பரிதாப சாவு – மற்றொருவர் கதி என்ன?

0
107

கோவை அருகே உள்ள சோமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 19). இவர் கோவை தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். கோவையை சேர்ந்த இவருடைய நண்பர் கோடீஸ்வரன் (19) அதே கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை பிரசாந்த், கோடீஸ்வரன் ஆகியோர் அதே கல்லூரியில் படிக்கும் தங்களது நண்பர்கள் 17 பேருடன் மோட்டார் சைக்கிள்களில் கோவையை அடுத்த சிறுமுகை பேரூராட்சி பம்ப் ஹவுஸ் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

இந்தநிலையில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். இதில் பிரசாந்த், கோடீஸ்வரன் ஆகிய 2 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து புதிய பம்ப் ஹவுஸ் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை கயிறு மூலம் ஒருவர் பின் ஒருவராக மீட்டு காப்பாற்றினர். இதுகுறித்த தகவலின்பேரில் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பரிசல்காரர்கள் உதவியுடன் மாணவர்களை ஆற்றின் கரையோரப்பகுதி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் கோடீஸ்வரனின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பிரசாந்தின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பவானி ஆற்றில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.