மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில், 1.29 கோடி ரூபாய் செலவில், 45 கடைகள் கொண்ட, வார சந்தை கட்டடம் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரில் அண்ணாஜி ராவ் சாலையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தை உள்ளது. நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள பொதுமக்கள், கடை வியாபாரிகள், உழவர் சந்தையிலும், அண்ணாஜி ராவ் சாலையில் உள்ள அண்ணா மார்க்கெட்டிலும் காய்கறிகளை வாங்கி வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன், மேட்டுப்பாளையம் நகரில் சிறுமுகை சாலையில், நகராட்சி வள்ளுவர் துவக்க பள்ளி அருகே உள்ள காலி இடத்தில், வார சந்தை செயல்பட்டது. நகர் வளர்ச்சி அடைந்ததை அடுத்து, வார சந்தை செயல் படாமல் போனது. அந்த இடம் காலியாகவே இருந்தது. அந்த இடத்தின் ஒரு பகுதியில், தாசில்தார் குடியிருப்பு, காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள இடம் காலியாக இருந்தன. அந்த இடத்தில் வார சந்தை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி மூர்த்தி கோரிக்கை விடுத்தார்.
இதை அடுத்து, நகராட்சி நிர்வாகம் வார சந்தை அமைக்க அனுமதி வழங்கி, 1.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. நகராட்சி வள்ளுவர் துவக்க பள்ளி அருகே, 20 மீட்டர் அகலத்திலும், 26 மீட்டர் நீளத்திலும் பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலத்திலும், சந்தை வியாபாரிகள் பாதிக்காது வகையில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. சந்தை வியாபாரிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை வைத்து விற்பனை
செய்ய, 2.4 மீட்டர் நீளம், அகலத்தில், 45 கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக மின் இணைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இது அல்லாமல் கட்டடத்தின் முன்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு இட வசதியும், கழிப்பிடமும், அலுவலகமும் கட்டப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்து, வார சந்தை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.