கோவை: பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், 17வது தயான் சந்த் நினைவு கோப்பை ஹாக்கி போட்டி நேற்று துவங்கியது.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 17வது ‘மேஜர் தயான் சந்த் நினைவு கோப்பை’க்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி, பீளமேடு, பி.எஸ்.ஜி., டெக் மைதானத்தில் நேற்று துவங்கியது; வரும், 9ம் தேதி நிறைவடைகிறது.
ஆண்களுக்கான இப்போட்டியில், 10 அணிகள் மூன்று குழுக்களாக ‘லீக்’ முறையில் போட்டியிடுகின்றன. முதல் நாளான நேற்று முதல் போட்டியில், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 4-0 என்ற கோல் கணக்கில் எஸ்.கே.சி.இ.டி., அணியை வென்றது.
அதிகபட்சமாக, வீரர் சஞ்சீவ் இரு கோல்கள் அடித்தார். இரண்டாம் போட்டியில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் பார்க் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்றது. வீரர் அஸ்வதா இரு கோல்கள் விளாசினார்.
மூன்றாம் போட்டியில், பி.பி.ஜி.ஐ.டி., கல்லுாரி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் யு.ஐ.டி., கல்லுாரி அணியை வென்றது. பி.பி.ஜி.ஐ.டி., அணி வீரர் தவ விஸ்வா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.