கோவை; கோவையில் மூடப்பட்ட ஐ.டி., நிறுவன பணியாளர்களுக்கு, தொழிலாளர் நல சட்டங்களின் படி, ஏழு நாட்களுக்குள் இழப்பீடு வழங்குவதாக, ‘போக்கஸ் எஜுமேட்டிக் ‘ ஐ.டி., நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில், இயங்கி வந்த ‘போக்கஸ் எஜுமேட்டிக்’ என்ற ஐ.டி., நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது. நிவாரணம் கோரி, ஐ.டி.பணியாளர்கள் அரசு அதிகாரிகளை கடந்த ஜன.,27 முதல், சந்தித்து வந்தனர்.
இது குறித்து, பணியாளர்களின் பேட்டியுடன், நமது நாளிதழில் தொடர்ந்து விரிவான செய்தி, படங்கள் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, தொழிலாளர்துறை உதவி கமிஷனர் ராஜ்குமார் (சமரசம்) தொழிலாளர் துறை கூடுதல் கமிஷனர் சாந்தி ஆகியோர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஐ.டி.,பணியாளர்கள் ஐந்து பேர் கொண்ட குழு முன்னிலையில், ஐ.டி., நிறுவன நிர்வாகிகளுடன் நேற்று மாலை வரை, இரண்டு கட்ட பேச்சு நடந்தது.
அதில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி, கடந்த மாத சம்பளத்தை, விடுபட்டவர்களுக்கு வருகைப்பதிவின் அடிப்படையில் வழங்குதல், கதவடைப்பு அறிவிப்பு காலத்திற்கான ஒரு மாத சம்பளம், பணிபுரிந்த ஆண்டுகளின் அடிப்படையில், ஒரு ஆண்டுக்கு, 15 நாள் சம்பளம் வீதம் பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கில் கொண்டு, பணி இழப்பீட்டுத்தொகை வழங்குதல், ஐந்தாண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, தொழிலாளர் நல சட்டத்தின்படி பணிக்கொடை வழங்குதல், நிலுவையிலுள்ள விடுப்புக்கு ஈடான சம்பளத்தை வழங்குதல், கல்விச்சான்றிதழ்களை திரும்ப கொடுத்தல், நிறுவனம் கொடுத்த லேப்டாப்களை நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு ஈடாக கொடுத்த செக்குகளை பெற்றுக்கொள்ளுதல், உள்ளிட்ட கோரிக்கைகளை, வரும் ஏழு நாட்களுக்குள் நிறைவேற்றித்தருவதாக, அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தொழிலாளர் நல அலுவலகத்தை சுற்றிலும் காத்திருந்த, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.