முஸ்லிம் இளைஞர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை – போலீஸ் கமி‌‌ஷனரிடம் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மனு

0
104

கோவை மாவட்ட அனைத்து ஜமா அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்றுக்காலை கோவை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகம் வந்தனர் அப்போது அவர்கள் கமி‌‌ஷனர் சுமித் சரணிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவையில் கடந்த 2-ந் தேதி ஒரு பெண்மணி அளித்த புகாரின்பேரில் ஷேக் மற்றும் சபியுல்லா என்ற 2 முஸ்லிம் இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்காகும். இதே போல கடந்த 7-ந் தேதி இரவு 10.30 மணியளவில் கோவை குனியமுத்தூர் வெற்றிலைக்கார வீதியில் வந்து கொண்டிருந்த ஜாபர் அராபத் என்ற முஸ்லிம் இளைஞரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 9-ந் தேதி சபியுல்லா மற்றும் ஷேக் என்ற முஸ்லிம் இளைஞர்கள் குனியமுத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு முற்றிலும் புனையப்பட்ட பொய் வழக்காகும்.
இந்த சம்பவங்களில் சில போலீஸ் அதிகாரிகள் வேண்டுமென்றே முஸ்லிம் இளைஞர்கள் என்பதால் அவர்களை மிரட்டும் வகையில் செயல்படுகிறார்கள். மேலும் சபியுல்லா மற்றும் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் அங்கிருந்த சிறை காவலர் ஒருவர் தாடியை உடனடியாக எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் இஸ்லாமிய மத அடிப்படையில் அவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்த தாடியை எடுக்க வைத்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் கோவை சிறையில் முஸ்லிம்கள் தங்கள் மத அடையாங்களை பின்பற்ற முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு முஸ்லிம் இளைஞர் களுக்கு எதிராக தவறு செய் பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.