மும்பையில் வளைத்தது கோவை போலீஸ் : வெங்காய மோசடியில் ஈடுபட்ட ‘பழம்

0
16

கோவை; மொத்த விலைக்கு வெங்காயம் தருவதாக கூறி, முன்னாள் ராணுவ வீரரிடம் பண மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

போத்தனுார், அன்பு நகரை சேர்ந்தவர் கேப்ரியல் ஆன்டனி, 55; முன்னாள் ராணுவ வீரர். தற்போது செக்யூரிட்டி சர்வீஸ் செய்து வருகிறார். இவருக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய விருப்பம் இருந்தது.

இது குறித்து இணையத்தில் தேடி வந்தார். அப்போது, ‘ஒன் 100 புராஜெக்ட்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பார்த்தார். அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணிற்கு அழைத்து பேசினார். அதில் பேசிய சித்திரை பழம், 58 என்ற நபர், எம்.ஆர்.சி., டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் மொத்த விலைக்கு, வெங்காயம் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய கேப்ரியல், சித்திரை பழத்தின் வங்கி கணக்கிற்கு ரூ. 15 லட்சத்தை அனுப்பினார். இதன் பின்னர், சித்திரை பழத்தை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் கேப்ரியலின் அழைப்பை ஏற்க வில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பணம் பெற்ற நபர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சித்திரை பழத்தை கைது செய்து, கோவை அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.