கிணத்துக்கடவில் கோவை -பொள்ளாச்சி மெயின் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 1973-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக இருந்தபோது இந்த பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அப்போது 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 24 பேர் கலந்துகொண்டனர். அதாவது 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர். இதில் அவர்கள் கிணத்துக்கடவு மட்டுமின்றி பொள்ளாச்சி, கோவை, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வந்தனர்.
அப்போது முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்து தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ஆடி, பாடி மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். இதில் பள்ளியின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதற்கிடையே முன்னாள் மாணவர்கள், பள்ளியில் கழிவறையை துப்பரவு பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து கொடுத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர்.