முதுகெலும்பு ஒடியும்; ஆஸ்துமா இலவசம்! மாநகராட்சி ஆமை வேகம்; நெடுஞ்சாலைத்துறை வேடிக்கை

0
7

கோவை: கோவை – திருச்சி ரோட்டில் வாகனங்களில் பயணித்தால் முதுகெலும்பு ஒடியும் அளவுக்கு ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது; புகைமூட்டம் போல் துாசி பறப்பதால், ஆஸ்துமா பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலைத்துறையினரோ, மாநகராட்சியை கைகாட்டி விட்டு, வேடிக்கை பார்க்கின்றனர்.

கோவை நகர் பகுதியில், 2,618.08 கி.மீ., நீளமுள்ள சாலைகள், மாநகராட்சியால் பராமரிக்கப்படுகின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினரால், 219.60 கி.மீ., நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் காஸ் குழாய் பதிக்க சாலைகளை அடிக்கடி தோண்டுவதால், குண்டும் குழியுமாக இருக்கின்றன. இந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்வதால், முதுகு தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

திருச்சி ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளது; சிங்காநல்லுாரில் இருந்து ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையம் வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்க, மாநகராட்சிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மாநகராட்சி தரப்பில் ஆமை வேகத்தில் பணிகள் செய்யப்படுகின்றன; குழாய் பதித்த இடத்தில் புதிதாக ரோடு போடவில்லை. சிங்காநல்லுாரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டலஅலுவலகத்துக்கு எதிர்ப்புறத்தில் இருந்து டிரினிட்டி மருத்துவமனை வரை ரோடு படுமோசமாக இருக்கிறது.

ரோட்டின் ஒரு பகுதி தார் ரோடு; இன்னொரு பகுதி மண் ரோடாக குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். புகை மூட்டம் போல் துாசி பறப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல், ஒண்டிப்புதுாரில் இருந்து கோவை நோக்கி வரும் ரோட்டிலும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கின்றன. இதை கண்காணித்து பணியை துரிதப்படுத்த வேண்டிய, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘திருச்சி ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதாக இருந்தாலும், பாதாள சாக்கடை பணியை மாநகராட்சியே மேற்கொள்கிறது; ரோட்டை சீரமைக்க வேண்டியது மாநகராட்சி பொறுப்பு. நாங்களும் தொடர்ந்து போராடி வருகிறோம். எங்களையே பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர்.’ என்றனர்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ”சூயஸ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்து விட்டது. பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்படுகிறது; 2.5 கி.மீ., பதிக்க வேண்டும். சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் வரை ‘பேட்ச் ஒர்க்’ செய்து விட்டோம். திருச்சி ரோட்டில் இன்னும் இரண்டரை மாதத்துக்குள் பணியை முடித்து, ரோடு போட்டுக் கொடுக்கப்படும்,” என்றார்.