முதியவரிடம் ரூ. 24 லட்சம் மோசடி

0
8

கோவை; கோவை, சவுரிபாளையத்தை சேர்ந்தவர் மனோஜ், 69; ‘பிளை எமிரேட்ஸ்’ நிறுவனத்தில் விமான தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மொபைல் எண்ணுக்கு, கடந்த டிச., 20ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தான், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து அழைப்பதாக தெரிவித்தார். தன்னை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, மனோஜ் பெயரில் இருக்கும் ஒரு கிரெடிட் கார்டில் இருந்து, தீவிரவாதிகளுக்கு பணம் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இதில் இருந்து விடுவிக்க, மனோஜின் வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும்; வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எல்லாம், தான் கொடுக்கும் கணக்கிற்கு அனுப்ப கூறியுள்ளார். ஆய்வு முடிந்த பிறகு பணத்தை திருப்பி அனுப்பி விடுவதாக தெரிவித்தார். இதை நம்பிய மனோஜ், டிச., 20ம் தேதியே, மூன்று தவணைகளாக ரூ. 24 லட்சத்தை அனுப்பினார். பணம் அனுப்பியதும், அந்த நபர் அழைப்பை துண்டித்தார். அதன் பிறகு, அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.