முதல்வர் கூறியபடி அமைதியாக இருக்கிறதா தமிழகம்? ‘தாளிக்கிறார்கள்’ கோவை மக்கள்

0
5

எதிர் கட்சிகள் விமர்சிப்பது போல் தமிழகம் இல்லை. இங்கு மக்கள் அமைதியாக உள்ளனர்’ என, தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கோவை மக்கள் சிலரிடம் கருத்து கேட்டோம்…

‘அரசு தீர்வு காண வேண்டும்’

இருக்கும் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும். இந்த அரசு தீர்வு காணவில்லை. உதாரணமாக, பதிவுத்துறையில் பல பிரச்னைகள் உள்ளன. பதிவுக் கட்டணம் உயர்வு, முத்திரைத் தாள் விலை உயர்வு என, பல பிரச்னைகள் உள்ளன. அதை அரசு கண்டு கொள்வதில்லை.

-ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழில்

‘எங்கிருந்து அமைதி வரும்’

தமிழகம் போதையில் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். வீதிக்கு வீதி டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாழாகி கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் அமைதி எங்கிருந்து வரும்?

ரமேஷ் பாபு சுயதொழில்

‘குற்றங்களுக்கு காரணம் வேலையின்மை’

இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. பல குற்றங்களில் இளைஞர்கள் ஈடுபட, வேலை இல்லாததுதான் காரணமாக உள்ளது. ரேஷனில் இலவசமாக அரிசி கொடுத்து விட்டால், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ முடியாது. இதை தமிழக அரசு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

-அஜித் தனியார் நிறுவன ஊழியர்

‘பணம் கொடுத்தால் அமைதியா’

மகளிருக்கு 1000 ரூபாய் பணம் கொடுப்பதால், மக்கள் எல்லோரும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் வாழ முடியுமா? படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போகுது. வருமானம் இல்லை. இதை எல்லாம் செய்தால்தான், நாடு அமைதியாக இருக்கும்.

– ராதாகிருஷ்ணன் தனியார் நிறுவன ஊழியர்

‘அமைதிக்கான சூழல் இல்லை’

அமைதியாக வாழவேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகின்றனர். அதற்கான சூழல் தமிழகத்தில் இல்லை. மக்களின் பிரச்னைகளையும், தேவைகளையும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும். சும்மா திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது.

– ராகவன் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்

‘சட்டங்களை கடுமையாக்கணும்’

தமிழகம் அமைதியாக இருக்கிறது என்றால், இத்தனை கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமை எப்படி நடக்கிறது. சட்டங்களை அரசு கடுமையாக்க வேண்டும். மக்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் அமைதி வரும்.

– கருப்புசாமி ஆட்டோ ஓட்டுனர்.

‘பிரச்னை இல்லாத நாளே இல்லை’

தமிழகத்தில் பிரச்னை இல்லாத நாளே இல்லை. அப்புறம் எப்படி தமிழகம் அமைதியாக இருக்கும். வெயில் காலம் வந்துவிட்டது. மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். ரோடு குண்டும் குழியுமாக கிடக்கிறது. வார்டு கவுன்சிலர்கள்

கண்டுகொள்வதில்லை.

– செல்லத்துரை சுயதொழில்