முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

0
92

ஆனைமலையில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரத்தில் அந்த குழந்தையை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

முட்புதரில் பச்சிளம் குழந்தை வீச்சு

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்து சுப்பையா கவுண்டன்புதூர் உள்ளது. இங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனைக்கேட்ட அந்த பகுதி வழியாக சென்றவர்கள், முட்புதருக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. சேலையில் சுற்றப்பட்டு இருந்த அந்த பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்ததால் அங்கிருந்த பெண்கள் தாலாட்டினர். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தாததால் பால் கொடுத்து அழுகையை நிறுத்தினர்.

ேபாலீசார் விசாரணை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த பச்சிளம் ஆண் குழந்தை குழந்தைகள் நல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? முறை தவறி பிறந்ததால் முட்புதரில் பச்சிளம் குழந்தை வீசப்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.