மீன் மார்க்கெட்டை இடித்து விட்டு வீடு கட்டித்தர கோரிக்கை ; மாநகராட்சி அலுவலகத்தை துாய்மை பணியாளர்கள் முற்றுகை;

0
11

கோவை: உக்கடம் அருகே கெம்பட்டி காலனியில் ஏற்கனவே வசித்த இடத்தில், மீண்டும் வீடு கட்டித்தரக்கோரி, கோவை மாநகராட்சி அலுவலகத்தை, துாய்மை பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

கோவை, உக்கடம் அருகே கெம்பட்டி காலனியில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்தனர். மேம்பாலம் கட்டுமான பணிக்காக, அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டன.

மாற்று இடமாக, புல்லுக்காடு மைதானம் பகுதியில், தற்காலிக குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டன. அவற்றில் தற்போது வரை வசிக்கின்றனர்.

வீடுகளை இடித்தபோது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மொத்தம், 520 வீடுகள் கட்ட வேண்டும்; இதுவரை, 222 வீடுகளே கட்டப்பட்டுள்ளன.

மீதமுள்ள, 298 வீடுகளை கட்டுவதற்கு, சில்லரை மீன் மார்க்கெட் வளாகத்தை மாநகராட்சி இடித்துத் தர வேண்டும். அப்பணியை, டிச., மாதத்துக்குள் துவக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், மீன் வியாபாரிகள் ரூ.3.5 கோடி வாடகை நிலுவை வைத்திருப்பதால், மார்க்கெட் வளாகத்தை இடிக்க, மாநகராட்சி தயக்கம் காட்டுகிறது. மீன் வியாபாரிகள் தரப்பில், கடைகள் ஒதுக்கீடு பெற்ற சமயத்தில், வைப்புத்தொகை செலுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

அது தொடர்பாக, மாநகராட்சி பதிவேட்டில் குறிப்புகள் இல்லாததால், பிரச்னை இழுத்துக் கொண்டிருக்கிறது. நிலுவைத் தொகை இறுதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு நடந்தது. மாநகராட்சி உதவி கமிஷனர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் பங்கேற்றனர்.

பணியாளர்கள் முற்றுகை

இச்சூழலில், புல்லுக்காடு மைதானத்தில், தற்காலிக கூடாரத்தில் வசிக்கும் துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, ‘ஏற்கனவே தாங்கள் வசித்த பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு மீன் மார்க்கெட்டை இடித்துத் தர வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4ம் தேதி (இன்று) முதல் கறுப்புக் கொடி போராட்டம், 6ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவோம்’ என, மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, துாய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளிடம், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் பேச்சு நடத்தினர்.

அதற்கு, ‘மீன் வியாபாரிகள் செலுத்த வேண்டிய நிலுவை தொகை இறுதி செய்யப்பட்டதும்; மார்க்கெட் இடித்து தரப்படும்’ என, மாநகராட்சி தரப்பில் உறுதிஅளிக்கப்பட்டது.

‘தீர்வு காண பேச்சு நடக்கிறது’

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ”உக்கடம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் செலுத்த வேண்டிய வாடகை நிலுவை தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்து வருகிறது. அதில், நிலுவை வாடகை தொடர்பாக இறுதி செய்யப்படும். நிலுவை தொகை செலுத்தியதும், புதிய கடைகள் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படும். நிலுவை தொகை எவ்வளவு என்பது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண பேசி வருகிறோம்,” என்றார்.