மிளகு அறுவடை பணி தொடங்கியது

0
55

வால்பாறை பகுதியில் தேயிலை, காபி, மிளகு, ஏலக்காய் போன்ற பண பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இதில் தேயிலை தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு நிழல் தருவதற்காகவும், மண் அரிப்பை தடுப்பதற்காகவும் சவுக்கை மரங்கள் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. தேயிலை தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வரும் இந்த மரங்களில் ஊடுபயிராக மிளகு கொடிகள் பயிரிடப்பட்டு உள்ளது. மரங்களில் படர்ந்துள்ள மிளகு கொடிகளில் மிளகு காய்த்து உள்ளன. வால்பாறை பகுதியில் கடந்த நாட்களில் அதிகளவு மழை பெய்ததால், அனைத்து மிளகு கொடிகளிலும் மிளகுகள் காய்த்து தொங்குகின்றன. தற்போது வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் மிளகு கொடிகளில் உள்ள மிளகுகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை பகுதியில் கரிமுண்டா, பன்னியூர் என்ற 2 வகையான மிளகுகள் விளைவிக்கப்படுகிறது. இந்த 2 வகையான மிளகுகளும் தற்போது காய்த்து விட்டதால், மிளகு பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு கிலோ மிளகு ரூ.650 முதல் ரூ.800 வரை வெளிச்சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.