மின் பராமரிப்பு பணியால் பில்லுார் 3 வது குடிநீர் வராது! சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி வேண்டுகோள்

0
4

கோவை; மின்வாரிய பராமரிப்பு பணி நடப்பதால், பில்லுார் மூன்றாவது திட்டத்தில் தண்ணீர் ‘பம்ப்’ செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், இன்னும் சில நாட்களுக்கு குடிநீர் வினியோக இடைவெளி அதிகரிக்கும்; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறுவாணி, பில்லுார் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சப்ளை செய்யப்படுகிறது. பில்லுாரில் இருந்து பில்லுார்-1, பில்லுார்-2, பில்லுார்-3 மற்றும் வடவள்ளி – கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பில்லுார் மூன்றாவது திட்டத்துக்கு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. முருகையன் பரிசல் துறை பகுதியில் தலைமை நீரேற்று நிலையம் உள்ளது.

மின்வாரியம் சார்பில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று (4ம் தேதி) முதல், 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதனால், ‘பம்ப்’ செய்து பில்லுார் மூன்றாவது திட்டத்தில் குடிநீர் எடுக்க முடியாத சூழல் உள்ளது. இத்திட்டத்தில், நாளொன்றுக்கு, 70 லட்சம் முதல், 90 லட்சம் லிட்டர் வரை குடிநீர் பெறப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வந்தது.

சில பகுதிகளுக்கு, 24 மணி நேரமும், சில இடங்களுக்கு தினமும், சில பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள், சில இடங்களில் இரு நாள், நான்கு நாள் இடைவெளியில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதால், இதர திட்டங்களில் பெறப்படும் அளவை அதிகரிக்க, மாநகராட்சி அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

இதில், 24 மணி நேரமும் சப்ளையாகும் பகுதிகளுக்கு இடையூறு செய்யாமல், மற்ற பகுதிகளில் வினியோக முறையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளனர். மின் வாரிய பராமரிப்பு பணி முடிய ஏழு நாட்களாகும் என கூறப்பட்டு இருக்கிறது. அதனால், வாரத்துக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்க வாய்ப்பிருப்பதால், சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.