மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

0
10

மேட்டுப்பாளையம், ஜன.3: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கோவை மின் பகிர்மான வட்டம் மேட்டுப்பாளையம் கோட்டம் சார்பில் நேற்று மின்சார சிக்கன வார விழாவையொட்டி மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி மின்வாரிய செயற்பொறியாளர் சத்யா தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மின் சிக்கனம் – தேவை இக்கணம், ஒரு யூனிட் சேமிப்பு – இரு யூனிட் உற்பத்திக்கு சமம், இன்றைய மின்சார சேமிப்பு – நாளை ஆதாயம், குண்டு பல்புகளுக்கு பதிலாக சிஎப்எல் அல்லது எல்இடி விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மின்வாரிய ஊழியர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் கோஷமிட்டபடி நூற்றுக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.

மேட்டுப்பாளையம் அபிராமி தியேட்டர் முன்பு துவங்கிய இந்த பேரணி கோவை சாலை வழியாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, சாலை ஓரங்களில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் பொதுமக்களுக்கு ஊழியர்கள் வழங்கினர். இந்த பேரணியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கனகராஜ், சுரேஷ் குமார், தரணிபதி, ஜெஹாபர் சாதிக், மின்வாரிய உதவி பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.