சூலூர்: சூலூர் அருகே மின் கம்பத்தில் மோதிய பைக், தீப்பிடித்து எரிந்தது. பைக்கில் சென்ற தொழிலாளர்கள், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் புத்து பரிகா, 31, பாஷந்தா பிஸ்கி, 28. இருவரும், சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் அப்பநாயக்கன்பட்டியில் இருந்து பொருட்கள் வாங்கி கொண்டு, இருவரும் பைக்கில், தங்களது அறைக்கு சென்றனர். அதிவேகமாக பைக்கை ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த பைக், நிலை தடுமாறி, ரோட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.
இதில், பைக் தீப்பிடித்து எரிந்தது. இரு தொழிலாளர்கள் மீதும் தீப்பற்றி பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.