மின்கட்டண உயர்வை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை

0
74

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சக்கட்டம் என்றும், மின்கட்டண உயர்வை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

மின்சார கட்டணம் சேமிப்பு

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது எல்.இ.டி. விளக்குகள் வாங்கியதில் முறைகேடுகள் தொடர்பாக கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை மாலையில் முடிவடைந்தது. பின்னர் கோவை சுகுணாபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது ஒரு நல்ல திட்டம். அனைத்து விளக்குகளும் தெருவிளக்குகளாக மாற்றப்பட்டதால் மின்சாரம் சேமிக்கப்பட்டதுடன், வருடத்துக்கு ரூ.400 கோடி மின்சார கட்டணமும் சேமிக்கப்பட்டது.

பொறுக்க முடியவில்லை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக ஆட்சி செய்தார். தற்போது நாங்கள் எங்கள் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களிடையே எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல முறையில் வரவேற்பு உள்ளது.

2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கோவை வந்தபோது, மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. கோவை, திருப்பூரை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர். இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பழிவாங்கும் உச்சக்கட்டம்

முதல்-அமைச்சர் என்பவர் மக்களுக்கான திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். ஆனால் அதைஎல்லாம் விட்டு விட்டு அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கைதான் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே எனது மீது 2 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. அந்த வழக்குகள் கோர்ட்டில் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதால், தற்போது வேண்டும் என்றே மேலும் ஒரு வழக்கு என்மீது பொய்யாக போடப்பட்டு இருக்கிறது.

நாங்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து உள்ளோம். எனவே எனது வீட்டில் சோதனை என்று அறிந்ததும் ஏராளமானோர் வீட்டின் முன்பு குவிந்தனர். அதில் வக்கீல், பெண்கள் என்றும் பார்க்காமல் காவல்துறையினர் அவர்களை தரதரவென இழுத்து மிகப்பெரிய அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர். இது மிகப்பெரிய முன்னுதாரணமாக, அரசியலில் பழிவாங்கும் உச்ச கட்டத்துக்கே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுவிட்டார்.

திசைதிருப்ப சோதனை

தி.மு.க. பொறுப்பேற்று 1½ ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் எந்த திட்டங்களையும் செய்யவில்லை. மின்கட்டணம், வரியினங்களைதான் உயர்த்தி உள்ளனர். மின்கட்டணம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக மிகவும் பேசப்பட்டு வருகிறது. அத்துடன் எங்கள் பொதுச்செயலாளருக்கு மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு பெருகி வருகிறது

எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் எளிதாக வெற்றியை பெற்று விடுவோம். இதை மனதில் வைத்துக்கொண்டு, மின்கட்டண உயர்வை திசை திருப்பவே எனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

பொருட்கள் கைப்பற்றவில்லை

எனவே அ.தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கையாக பொய்யான குற்றச்சாட்டை என்மீது சுமத்தி, எனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையின் போது எனது வீட்டில் ரூ.7,500 மட்டுமே இருந்தது. அதை எடுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த பணத்தை திரும்ப என்னிடம் கொடுத்துவிட்டு சென்றனர். எனது வீட்டில் இருந்து வேறு எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.

நாங்கள் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை செய்து உள்ளோம். மேலும் கோவைக்கு நாங்கள் கொண்டு வந்த 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.