கோவை; கோவைக்கான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த மாதத்துக்குள் வெளியிடப்படும் என, தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நகர வளர்ச்சி
யை கணக்கிட்டு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 10 ஆண்டுக்கு ஒருமுறை நகர ஊரமைப்புத்துறையால், முழுமைத் திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிக்கப்படும். கோவையில், 1994க்கு பின், ‘மாஸ்டர் பிளான்’ வெளியிடவில்லை.
தொழில்துறையினர், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர் என பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு, பிப்., 11ல் பொதுமக்கள் பார்வைக்கு வரைவு ‘மாஸ்டர் பிளான்’ வெளியிடப்பட்டது.
2041ல் எதிர்பார்க்கும் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் எல்லை, 1,531.57 கி.மீ., பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது.
நகரின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, சாலை விரிவாக்கம், சுற்றுச்சூழல் மேம்பாடு, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அலசப்பட்டு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொழில் அமைப்புகள், ரியல் எஸ்டேட் துறையினர், தன்னார்வ அமைப்பினர் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. மொத்தம், 3,500 மனுக்கள் பெறப்பட்டன.
நவ., மாதத்துக்குள் இறுதி செய்து, அரசுக்கு அனுப்பி, 2025 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. கோரிக்கைகள் இறுதி செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு நகர ஊரமைப்புத்துறை அனுப்பியிருக்கிறது.
இச்சூழலில், சென்னையில் நேற்று நடந்த விழா ஒன்றில், ‘கோவைக்கான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த மாதத்துக்குள் வெளியிடப்படும்’ என்கிற அறிவிப்பை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
நகர ஊரமைப்புத்துறை இணை இயக்குனர் புருசோத்தமனிடம் கேட்டதற்கு, ”திருத்தங்கள் செய்யப்பட்ட ‘மாஸ்டர் பிளான்’ கோப்பு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது; பரிசீலனையில் இருக்கிறது. இதுதொடர்பாக, அரசாணை வெளியிட வேண்டும்,” என்றார்.
தொழில்துறையினர் கூறுகையில், ‘கட்டட அனுமதி பெற ஒற்றை சாளர முறையை நகர ஊரமைப்புத்துறை, உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் வீட்டு வசதி துறை அறிமுகப்படுத்த வேண்டும். இது, தொழிற்சாலை கட்டுமானங்களுக்கு தேவையான நில வகைப்பாடு விண்ணப்பம், அனுமதி மற்றும் வருவாய்த்துறை அனுமதி தாமதமின்றி கிடைக்க உதவியாக இருக்கும்.
1994 மாஸ்டர் பிளானில், தொழிற்சாலை நிலம் என வகைப்படுத்தியிருந்த நிலங்கள், கடந்தாண்டு வெளியிட்ட வரைவு மாஸ்டர் பிளானில் விவசாயம் மற்றும் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டிருந்தது; அவ்வாறு செய்யக் கூடாது.
1994 மாஸ்டர் பிளானில் இருந்ததுபோலவே, தொழிற்சாலை நிலமாக தொடர வேண்டும். இல்லையெனில், நில வகைப்பாடு மாற்றம் செய்வதற்கு, நில உரிமையாளர்கள் அலைய வேண்டியிருக்கிறது. இதற்கு பொருட்செலவு அதிகமாகும்; தேவையற்ற அலைக்கழிப்பு உண்டாகும்’ என்றனர்.