மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் நம்பிக்கை கடன் இலக்கு அடைய முழுவீச்சில் நடவடிக்கை

0
57

கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம், மாவட்டத்தில் உள்ள 39 கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, திட்டமிட்டுள்ள கடன் இலக்கை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில், 1.03 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, இலக்கை அடையக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ராமகிருஷ்ணன் கூறியதாவது:

நடப்பாண்டு, தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க முடிவு செய்து, எந்தெந்த பிரிவில் எவ்வளவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கேற்ப வழங்க அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, நடப்பு நிதியாண்டான ஏப்., முதல் மார்ச் வரையில், பயிர் கடனாக 780 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 677 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை நடைமுறை மூலதன கடன், 105 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 116.84 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகள் வாயிலாக மட்டும், 500 கோடிக்கு நகைக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 487 கோடி, அதாவது 97 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு திட்டங்களான, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாப்செட்கோ) திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் நலனுக்காக, தனி நபர் மற்றும் சுய உதவிக்குழுவினர் என பல்வேறு வகைகள் கடனுக்காக, 7.40 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 5.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) திட்டத்தின் கீழ், 2.20 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2.57 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகை கடன் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து வழங்கி, திட்டமிட்ட இலக்கை அடைய, முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.